0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு இந்த அரசாங்கம் உதவவில்லை என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

செங்கலடி நகரில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;


 இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மஹிந்த அரசு தனது கட்சிக் கூட்டத்துக்கு ஆட்சேர்த்து சாப்பாடும் காசும் கொடுப்பதற்குப் பாவித்துள்ளது. நாட்டில் உண்மையான அபிவிருத்தி இடம்பெறவில்லை. 

இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கியர்களை இந்த அரசு ஒற்றுமைப்படுத்தவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் மஹிந்த அரசு தீர்க்கவில்லை. யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிட்டுள்ளது. 

தனது நலனுக்காக ஒரு சில குழுக்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தினார் மஹிந்த. பௌத்த தலைமைப்பீடங்கள் இந்த நாட்டிலே ஒரு மத முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாமென்று மஹிந்தவை எச்சரித்தது. ஆனாலும் மஹிந்த அரசு அதனைத்தான் செய்தது. 

இப்பொழுது இந்த நாட்டில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் பறங்கியர்களும் மீண்டும் இந்நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒன்று சேர்ந்திருக்கின்றோம். 

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எட்டப்படுமெனவும்  தெரிவித்தார்.

நடைபெற்ற கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர், கட்சி உறுபினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல பாகங்களிலும் இருந்து வந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 














Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top