அரச அதிகாரிகளை அரசியலில் இணைத்து பேசுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
அவர் புதன்கிழமை (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்றுமில்லாதவாறு வெள்ளம் காரணமாக தத்தளிக்கின்ற இந்தத்தறுவாயில், அவர்களை காப்பாற்றுவதிலும் உணவு மற்றும் இருப்பிட ஏற்பாடுகளை செய்வதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
மாவட்ட விவசாயிகளுக்காக கூடிய செலவில் புனரமைக்கப்பட்ட குளங்கள் வெள்ளத்தால் உடைப்பெடுக்காதவாறு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.
இதற்கு மேலாக, தேர்தலை நியாயமான முறையில் நடத்தவேண்டிய பொறுப்பும் அரசாங்க அதிபர் என்ற ரீதியில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடமையையும் தற்போதைய இயற்கை அனர்த்தத்துக்கு மத்தியில் மேற்கொள்ளும் இந்தத் தறுவாயில், என்னைப் பற்றி அவதூறாக அநாமநேய முறையில் அரசியலுடன் இணைத்து தகவல்கள் பரப்பப்படுகின்றன.
வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் மூலை, மூடுக்கெல்லாம் செல்லவேண்டியுள்ளது. இதை மக்களுக்காக மேற்கொள்ளும் போது, இவ்வாறான அவதூறான தகவல்களினால் எமது அர்ப்பணிப்புகளை மழுங்கடிக்கக்கூடாது.
மக்களோடு மக்களாக இருக்கும் அரச அதிகாரிகள் அனர்த்தம் ஏற்படுகின்றபோது அறிக்கைகளை விட்டுவிட்டு இருக்கமுடியாது. மக்களை அனர்த்தத்திலிருந்து மீட்டு, சொந்த இடத்தில் அவர்களை குடியேற்றும்வரை எங்களின் முழுமையான பார்வை அவர்களுடனையே இருக்கும். அத்தோடு, இதற்கான நிதியை பெற்று அதனை உரிய மக்களின் செயற்பாட்டுக்கு பங்களிப்பு செய்யும்வரை நாங்கள் மிக அவதானத்துடன் இருப்போம்.
பாரிய வேலைப்பளுவுக்கு மத்தியில் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவதூறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிக்கும் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அரச அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்பட்டால், இவர்களிடம் முறையிடலாம்.
அவதூறான செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அந்த செய்திகளின் உண்மைத்தன்மையை பலமுறை உறுதிப்படுத்துதல் ஊடக தர்மமாகும். ஊடக தர்மத்தை பேணாமல், இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
வதந்திகள் வெளிவராமல் பார்த்துக்கொள்வது மக்கள் சார்பாக செயற்படுகின்ற ஒவ்வொரு ஊடகங்களின் தலையாய கடமையாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Home
»
Batti Kachcheri
»
மட்டக்களப்பு
»
மாவட்ட அரசாங்க அதிபர்
» 'அரச அதிகாரிகளை அரசியலில் இணைத்து பேசுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும்'
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment