மீண்டும் இலங்கைக்கு சுனாமி வருமா ?
இந்த வினாவுக்கான விடை இக்கட்டுரையை வாசித்ததும் இறுதியில் உங்களுக்குள்ளே பிறக்கும். இத்தகவல் கற்ற சமுதாயத்துக்கும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பேசுபவர்களுக்கும், செயற்படுபவர்களுக்கும், எமது மாவட்டத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கும் ஏன் அரசாங்கத்துக்கும் கூட எதிர்காலத்தில் மக்கள் நலன்நோக்கி பயணிக்க பயனுடையதாய் அமையும் எனக் கருதுகின்றேன்.
சுனாமி ஏற்பட்டு ஒரு தசாப்தத்தை பூர்த்தி செய்து நிற்கும் இன்றைய நாளில் எமது மக்கள் பல தசாப்தங்களுக்கு மட்டுநகர் மண்ணில் மட்டுமல்ல இலங்கைத் தீவு முழுவதிலும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதற்கு நான் அறிந்த ஒரு விடயத்தை ஆதார பூர்வமாக பாமர மக்களுக்குக் கொண்டு செல்லும் முதல் முயற்சியாக கற்றறிந்தோர் சிந்தனையைத் தூண்டும் வகையில் அவர்களின் வாசலுக்குச் சமர்ப்பிக்கின்றேன். தரப்படுகின்ற தகவலின் ஜதார்த்தத்தை இறுதியில் நீங்களே உணர்வீர்கள்.
இந்தோனேசிய நாட்டின் வட சுமாத்திரா கடல் பிராந்தியத்தில் 9.1 ரிச்டர் பிரமாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமியாய் உருவெடுத்து 40,000 க்கும் மேற்பட்ட உயிர்கள், பல மில்லியன் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள், பிறந்த மண் என அத்தனையையும் எம்மிடம் இருந்து பிரித்தது மட்டுமன்றி இன்றும் அதை நினைத்து அழுது புலம்புகின்ற மனிதர்கள், அதிர்ச்சியில் மீளாத உறவுகள், சிரிப்பை இழந்த சிறுவர்கள் என எம் மண்ணில் ஆயிரம் ஆயிரம் பேரை தத்தளிக்க வைத்துள்ளது. இத்தனையும் ஏன் எமக்கு!
அத்தனையும் எமக்கு அறியத் தவறியதால், அறிவைப் பகிரத் தவறியதால் ஏற்பட்ட விபரீதமே இது. 'சுனாமி' என்ற சொல்லை அன்றுதான் அறிகின்றோம். ஆனால் அந்தச் சுனாமி உருவெடுத்து எமது பிரதேசத்தை வந்தடைந்தது 2 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களின் பின்னர்தான். அதுவரை இந்தத் தகவல் எவருக்கும் முறையாகப் பகிரப்படவில்லை. இதனை ஓர் அனர்த்தமாக தகவல் பரப்பி 1 மணித்தியாலத்துக்கு முன்னரேனும் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தால் பல ஆயிரம் பேரை ஏன்? அத்தனை உயிர்களையும் காப்பாற்றி இருக்க முடியும். ஆகவே காரணமாய் அமைந்தது என்ன? விடயம் பற்றிய அறிவின்மையே!
இனிமேல் இத்தகையதொரு நிலை ஏற்படாதிருக்க 26.12.2004 சுனாமி எமக்கு கற்றுத்தந்த பாடமாகக் கருதிச்;; செயற்படுவது அவசியமாகும். இன்றைய உலகம் அனர்த்தங்களின் சகாப்தம் என்று கூறுமளவுக்கு இயற்கை மற்றும் மானிட அனர்த்தங்கள் நிறைந்ததாய் காணப்படுகின்றது. அனர்த்தத்துக்கு முகம் கொடுக்காத மனிதன் என்று உலகில் ஒரு மனிதன் இருக்க முடியாது. அனர்த்தங்களால் சூழ்ந்த மனித வாழ்க்கை எப்பொழுதும் சவால் மிக்கதாக மாறலாம். ஆகவே அவற்றை எதிர்கொள்ள, அவற்றுக்கு இயைந்து வாழ, முன்னாயத்தப்படுத்திக்கொண்டு உறுதியோடு செயற்பட, உளம் உடைந்து உறுதி இழக்காதிருக்க ஒரே ஒரு வழி ஒவ்வொரு மனிதனும் தனது சூழலில் தமக்குள்ள சவால்களை தெளிவாகப் புரிந்துகொண்டு வாழ்வதே ஆகும். அதனை சாதாரண சமூகத்துக்குள் ஏற்படுத்தாதவரைக்கும் அச்சமூகம்தான் குறித்த பிரதேசத்தில் உயர் நலிவுநிலை குழுவாகும் இதன் விளைவுதான் எமக்கு அன்று ஏற்பட்ட அவலம்.
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகின்றது? அது சுனாமியை எவ்வாறு தோற்றுவிக்கின்றது? அதனை நாங்கள் அறிந்துகொள்வதற்கு வழி என்ன? என்ற இந்தக் கேள்விகளுக்கு 10 வருடத்தில் சாதாரண மட்டத்தில் எத்தனை பேருக்கு சரியான தெளிவு இருக்கின்றது. எமது சமுதாயம் இதில் எந்தளவுக்குத் தெளிவுள்ளதாகக் காணப்படுகின்றது என்பதை ஆராய்ந்தால் அதுவே பெரியதொரு கேள்வி. அனர்த்தக்கல்வி தொடர்பில் அடிப்படையான அறிவு ஒரு சமுதாயத்துக்கு கட்டாய தேவை. வெள்ளமாக இருக்கட்டும், வரட்சியாக இருக்கட்டும், மின்னலாக இருக்கட்டும், நிலநடுக்கம், சுனாமியாக இருக்கட்டும் இவை அனைத்தும் எமது பிரதேசத்துக்கு சாத்தியமான இடர்கள். இவை பற்றிய அறிவின்றி வாழ்கின்ற வாழ்க்கை எதிர்காலத்தில் அர்த்தமற்றது என்றுதான் குறிப்பிட வேண்டும்.
அந்தவகையில் நிலநடுக்கத்தை எடுத்துக்கொண்டால் எப்பொழுதும் அது புவித்தகட்டு விழிம்புகளிலேயே ஏற்படுகின்றது. புவித்தகடு என்பது புவியின் உட்பாகத்தில் 6000 ழஊ இல் கொதித்துக்கொண்டு பாறைக் குழம்பு காணப்படுகின்றது. அதிலிருந்து புவி மேற்பரப்பை நோக்கி பிரமாண்டமான சக்தியின் உந்துதலால் கல்லியல் மண்டலம் என்று அழைக்கப்படுகின்ற புவியின் மேற்படை பிளவுறுகின்றது. அப்பிளவுகளே தகட்டு விழிம்புகள். இவற்றின்வழியே இலகுவாக உட்பாகத்தில் உருவாகும் சக்தி ஒவ்வொரு 2 மணித்தியாலதுக்கும் ஒரு தடைவ 700-10 கிலோ மீற்றர் வரையான ஆழத்திலிருந்து வெளியேறுகின்றது. சக்தி தோன்றும் ஆழத்தைப் பொறுத்து மேற்பரப்பை விட்டு அவை வெளியேறும் போது நாம் உணரும் அதிர்வுகளே பூமியதிர்ச்சி ஆகும். உலக வரலாற்றில் பூமியதிர்ச்சிகள் எங்கு ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் எங்கெங்கெல்லாம் தகடுகள் உருவாகியிருக்கின்றதோ அத்தகட்டு விழிம்புகளை அண்டித்தான் பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. பின்வரும் படம் புவியின் உள்ளமைப்பைக் காட்டுகின்றது.
இன்று உலகில் பல நூறு தகடுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவ்விழிம்புகளில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டவண்ணமே இருக்கின்றன. இவ்விழிம்புகள் சமுத்திர அடித்தளங்களிலோ அல்லது கண்டங்களிலோ (நிலப்பிரதேசம்) அமைவதைப் பொறுத்து அனர்த்தங்களின் வடிவங்கள் வேறுபடும். இந்த நிலையில் சுனாமியானது தகட்டு விழிம்பு ஒன்று கடல் அடித்தளத்தில் அமைந்து அதில் ஒரு நிலநடுக்கம் ஏற்படுமாயின் அது நிலத்திற்கு கீழ் ஏற்படுகின்ற ஆழம், நிலநடுக்கத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வடிவம் பெறும். இந்தப் பின்னணியில்தான் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கடல் அடித்தளத்தில் அமைந்த பர்மிய, இந்திய தகட்டு விழிம்பில் கடல் அடித்தளத்திற்கு கீழ் 10 கிலோ மீற்றர் ஆழத்தில், 9.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனால் சுனாமி உருவானது. இச்சுனாமி சுமார் 1500 கிலோ மீற்றர் தொலைவில் இருந்துவந்தே இலங்கையைத் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே இவற்றிலிருந்து விளங்கிக்கொள்ளலாம் ஒரு நிலநடுக்கம் ஏற்படுவதற்கு அடிப்படையில் தேவையான புவிப்பௌதீக நிலைமை என்ன? அது எச்சந்தர்ப்பத்தில் சுனாமியைத் தோற்றுவிக்கின்றன. இந்தப் பின்னணியில் எங்கெல்லாம் தகடு உருவாகின்றதோ அந்தப் பிராந்தியம் எப்பொழுதிருந்தும் ஆபத்துமிக்க வலயமாகவே அடையாளப்படுத்தபடுகின்றது. உலகெங்கும் ஆராய்கின்ற பொழுது புதிது புதிதாக நுண் தகடுகள் பல உருவாகியுள்ளன. புதுப் புது இடங்கள் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை போன்ற புவிப்பௌதீக அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து இலங்கையில் ஒரு சர்ச்சை நிலவியது வங்காள விரிகுடாவுக்கு ஊடாக கடலடித்தளத்தில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது அது ஒரு தகடாக இருக்குமா? அல்லது வட சுமாத்திரா நிலஅதிர்வினால் ஏற்பட்ட வெடிப்பா? ஏன்றெல்லாம் பலரையும் யோசிக்க வைத்தது. சுனாமியைத் தொடர்ந்து இலங்கைக்குத் தெரியாமலேயே பல ஆய்வுகள் செய்மதி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திUSGS (United State Geological Survey) NEIC (National Earthquake Information Centre) ஆகியன செய்மதித் தகவல்களைக் கொண்டு இது ஒரு புவித்தகடு என்பதை உறுதி செய்தது. இலங்கை அரசாங்கமும் இத்தகவலை மிகவும் தெளிவான முறையில் 2004 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் ஆறாவது பக்கத்தில் 'வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு 300 மைல்களுக்கு அப்பால் புவித்தகடு ஒன்று உருவாகியுள்ளது' என்ற தகவலை எழுத்து மூலம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இதுதான் எழுத்து மூலம் உள்ள முதலாவது அரச ஆவணம். இதன் பின்னர் பலர் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
புவியியற் கோட்பாட்டின் படி எங்கு ஒரு தகட்டு விழிம்பு தோன்றுகின்றதோ அங்கு அதற்கு அடையாளமாக தகட்டசைவுடன் தொடர்புபட்ட நிகழ்வு நிகழ்ந்தே ஆகவேண்டும். நிலநடுக்கம் மிகச் சிறியளவிலாவது ஏற்பட்டிருக்க வேண்டும், எரிமலை ஒன்று வெடித்திருக்க வேண்டும் அல்லது நிலவுருவம் ஒன்று தோன்றியிருக்க வேண்டும் அங்கு எதுவுமே நடக்கவில்லை. இதனால் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்திய தகவல் உண்மைதானா? என்பதில் சர்ச்சைகள் தீவிரமடையத் தொடங்கின. புவியியலாளன் என்ற வகையில் எனக்கு இந்த முடிவு பெரிய ஐயப்பாட்டை தோற்றுவித்தது. தகட்டோட்டக் கொள்கைக்கு ஒரு மாற்றுக் கருத்தாக இது அமைகின்றதே என்ற அச்சமும் நிலவியது. நானும் தகடு உண்டு என்று இனம்காணப்பட்ட இடத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய ஆவலோடு புதிய தகடு ஒன்று உருவாகியுள்ளது என்று கூறியவர்கள் அதனை தொடர்ந்து அவதானித்துக் கொண்டுதானே இருப்பார்கள் ஆகவே நான் அவர்களை அவதானித்துக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு நாளும் அவர்களது வெளியீடகளை ஆராய்வதைப் பழக்கமாகக் கொண்டதனால் ஓர் உண்மையை அறிந்துகொண்டேன்.
அதுதான் 2007 அம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி எங்கு புதிய தகடு ஒன்று உருவாகியுள்ளது என்று கருதப்பட்டதோ அந்த இடத்தில் 5.2 ரிச்டர் அளவில், கடல் அடித்தளத்தின் கீழ் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவான உண்மைத் தகவல். அன்றைய நாள் நாம் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலஅதிர்வு ஒன்றினை உணரத் தவறவில்லை. ஹம்பாந்தோட்டையில் திஸ்ஸமகாராம என்னும் இடத்தில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கரையோர மாவட்டங்களில் யாழ்பாணம் வரை அதிர்வு உணரப்பட்டது. அதை அன்றே உணர்ந்து அன்றே மறந்தவர்கள் ஏராளம். உணர்ந்ததில் இருந்து அதனைப் பின்தொடர்ந்தவர்கள் எத்தனையோ '?' ஆனால் நான் அதில் ஒருவன். இந்த முயற்சியில் எனக்குக் கிடைத்த ஆதாரம்தான் கீழ்; உள்ள உரு. இது எமக்கு எதனை உணர்த்துகின்றது எனில் சர்ச்சையில் இருந்த தகட்டை இயற்கை எமக்கு உறுதிப்படுத்தி தகட்டோட்டக் கொள்கையை மெய்ப்பித்திருக்கின்றது என்பதற்கும் அப்பால் எம்மைத் தயார்படுத்த ஒரு சமிக்ஞையை இலங்கைத் தீவுக்கு வழங்கியிருக்கினறது. இந்த நிலநடுக்கம் கண்டியிலிருந்து 420 கிலோ மீற்றர் தொலைவிலும், கொழும்பிலிருந்து 500 கிலோ மீற்றர் தொலைவிலும், நீர்கொழும்பிலிருந்து 505 கிலோ மீற்றர் தொலைவிலும், சென்னைக்கு 855 கிலோ மீற்றர் தொலைவிலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஆதாரத்தினை ஐக்கிய அமெரிக்காவின் USGS, NEIC ஆகியவற்றினை மேற்கோள் காட்டி எந்த இடத்திலும் சுட்டிக்காட்ட முடியும். இது கற்பனையோ அல்லது அனுபவப் பகிர்வோ அன்றி விஞ்ஞான பூர்வமானது. இந்த ஒரு விடயத்தை வைத்துக்கொண்டே அனர்த்த முகாமைத்துவத்தை இலங்கை முழுவதிலும் மறுமலர்ச்சி மிக்கதாக மாற்ற முடியும்.
மேலுள்ள படம் செய்மதி மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட சரியான இடத்தையும், அந் நிலநடுக்கம் பற்றிய விரிவான விபரத்தையும் காட்டுகின்றது. இது மட்டும்தானா நிகழ்ந்தது என்று பார்த்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல நிகழ்வுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. அதில் சிலவற்றை நாம் உணர்ந்தும் இருக்கின்றோம். இலங்கையைச் சூழ்ந்த கடற் பிராந்தியங்களில் சிறியளவிலான நிலநடுக்கங்கள் வௌ;வேறு கால இடைவெளிகளில் பதிவாகியுள்ளமையைப் படத்தில் காணலாம்.
இத்தகையதொரு நிலைமை இலங்கைக்கு அண்மையில் உருவாகியிருக்கின்றமை சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்ற அதேவேளை. இது எவ்வாறு எமது இயல்பு வாழ்வைப் பாதிக்கும் என்பது குறித்தும் ஆராய வேண்டிய தேவைப்பாடு உள்ளது. காரணம் 2004 ஆம் ஆண்டு சுனாமி கற்றுத்தந்த பாடமே இதன் மீதான கரிசனையை ஏற்படுத்தி நிற்கின்றது. இன்னுமொரு உண்மையையும் நாம் தெரிந்தாக வேண்டும். 2007.07.18 ஆம் திகதி 5.2 ரிச்டரில் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எந்த ஒரு புவிச்சரிதவியலாளரோ அல்லது புவியியலாளரோ அல்லது புவித்தொழில்நுட்ப பொறியியலாளரோ யாராக இருந்தாலும் மீண்டும் இந்தத் தகட்டில் நிலநடுக்கம் ஏற்படாது என்றோ! சிறிய அளவுத்திட்டத்தில்தான் ஏற்படும் என்றோ!! எப்பொழுது ஏற்படும் என்றோ!!! சூழுரைக்க முடியாது. காரணம் புவியின் உட்பாகச் செயன்முறை என்பது எமது அறிவுக்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. இவை இவ்வாறிருக்க மக்களின் நடைமுறைகள், அபிவிருத்திகள், அனர்த்த முகாமைத்துவ முன்னெடுப்புகள் எப்படி அமையவேண்டும் என்பதற்கு ஒரு கொள்கை வகுக்கப்படுதல் அவசியமாகும். கடந்த 2004 இல் 1500 கிலோ மீற்றர்கள் பயணித்து வந்த சுனாமி விட்டுச்சென்ற தடயங்களை நினைத்துப் பார்க்கின்ற பொழுது. இன்று இலங்கைக்கு அண்மையில் தோன்றிய நிலையை எப்படி மறந்து செயற்படுவது. நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்திலிருந்து இலங்கையின் கரையோரத்தை அளவிட்டுப்பார்த்தால் அந்தத் தூரம் மிகச் சாதாரணமானது.
ஆகவே இத் தகவல்களின் அடிப்படையில் ஒரு கணம் சிந்தியுங்கள்! கட்டுரையின் தலைப்புக்கு விடை என்ன? விடை எப்படியாவது இருக்கட்டும் ஆனால் விடயம் உண்மையாக இருக்கின்றது. ஆதாரத்துடன் அமைகின்றது. என்பதை ஏற்றுக்கொள்ளக் கூயதாக இருக்கின்றது அல்லவா? இன்று முதல் செயல் உருவாக்கத்துக்கான சிந்தனை விரிவாக்கப்படல் வேண்டும். சேர்ந்து செயற்படுவோம். செயல் உருப்பெற எம் மக்களுக்காய் உழைப்போம்.
கிருபா இராஜரெட்ணம்
சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
27.12.2014
Post a Comment