0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்திலே போட்டியிட்ட கட்சிகளுல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திகழ்கின்றது என்றால் அக் கட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை’ என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள நிலையில், அது முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளது தொடர்பாக கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம் பெற்ற போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘நாங்கள் தூர சிந்தனையோடுதான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஸ்தாபித்தோம். அல்லாஹ்வின் உதவியோடு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என்று பெற்று கட்சி வளர்ச்சி கண்டுள்ளது.

நாட்டில் முக்கியமான ஒரு தேர்தலை இன்னும் நாட்பது நாட்களுக்குள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலே, இலங்கையில் வாழ்கின்ற இருபது லட்சம் முஸ்லீம்கள் இத் தேர்தலில் யாரை யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்றும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்று ஊடகங்களும் வினா எழுப்பிக் கொண்டிருக்கின்ற இந்த வேலையில், அஸ்வர் ஹாஜியார் இராஜினாமா செய்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.



அவரின் இடத்திற்கு அமீர் அலியை நியமிப்பது தொடர்பாக கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக நான் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களது கருத்துக்களை கட்சியின் உயர்பீடத்தில் தெரிவிப்பேன். இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேவை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தால் எடுப்போம்; இல்லை என்றால் விட்டுவிடுவோம்.

அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், அவர் வகித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் கல்குடாத் தொகுதியில் இருந்தே தெரிவு செய்யப்படுவார். அது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்குறியது. யாரை நியமிப்பது என்று கட்சி தீர்மானிக்கும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே கல்குடாவை மட்டும் வைத்து முடிவு எடுப்பதா, வன்னி மக்களின் பிரச்சினையை மையமாக வைத்து முடிவு எடுப்பதா, அல்லது வட கிழக்கு மக்களை மாத்திரம் மையமாக வைத்து முடிவு எடுப்பதா, அல்லது நாட்டில் உள்ள இருபது லட்சம் முஸ்லீம்கள் பற்றி அவர்களின் பொருளாதாரத்தைப் பற்றி பள்ளி வாயல்கள், மதரசாக்கள் பற்றி சிந்தித்து முடிவு எடுப்பதா என்று கட்சி ஆலோசித்து வருகின்றது.

இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டு தரப்பும் எங்களை அழைக்கிறது. இரண்டு தரப்பும் அழைத்து என்ன வேண்டும் என்று கேட்கின்றனர். ஏன் இன்னும் யாரை ஆதரிப்பது என்று முடிவை அறிவிக்கவில்லை என்று கேட்கின்றார்கள்.

ஆனால் சமூகத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் பொருளாதாரத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் எதிர்காலம் பற்றியெல்லாம் சிந்தித்து யாரை ஆதரிப்பது பற்றி கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும்.’

இங்கு கருத்துத் தெரிவித்த பொது மக்கள், எங்கள் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத குறை கடந்த நான்கு வருடங்களாக இருந்து வந்துள்ளது என்றும் தற்போது தேசியப்பட்டியல் மூலம் வழங்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் பிரதி அமைச்சர் பதவி ஒன்றையும் சேர்த்து பெற்றுத்தர கட்சியின் தலைமை முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் மீறாவோடை அமீர் அலி மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, ஏ.மீராசாஹிப், ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், பள்ளிவாயல்களின் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top