மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்தத்தினால் 241,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,942 பேர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 214 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்தும் 64,984 குடும்பங்களைச் சேர்ந்த 241,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
49 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து இடம் பெயர்ந்த 2,919 குடும்பங்களைச் சேர்ந்த 9,942பேர் பாடசாலைகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் 17042 குடும்பங்களைச் சேர்ந்த 59,969 பேர் தங்கியுள்ளனர். இது வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,253 குடும்பங்களைச் சேர்ந்த 56.099 பேர் தமது வாழ்வதாரங்களை இழந்துள்ளனர்.
இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
Post a Comment