(த.லோகதக்சன்)
கல்குடா கல்வி வலயத்தில் இம்முறை ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து வலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கோட்டக் கல்வி பணிப்பாளர்களான நா.குணலிங்கம், எஸ்.பரமேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கலென பலர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை கல்விக் கோட்டத்தில் 52 மாணவர்களும், ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும், வாகரை கல்விக் கோட்டத்தில் 03 மாணவர்களும் என 105 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இம்முறை மேற்படி கல்விக் கோட்டத்தில் வரலாற்றில் முதன் முறையாக மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயத்தில் இருந்து ஒரு மாணவி சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் வலயத்தில் அதிகூடிய 186 புள்ளிகளைப் பெற்ற செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுதாகரன் அனோஜன் என்ற மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன், மற்றும் மேற்குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களும் வலயத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment