(த.லோகதக்சன்)
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகல தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு அவசிய தேவையான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்உதவி தங்களுக்கு பெரும் உதவியாக அமைந்ததாகவும், இவ்உதவியை வழங்கிய அகில இலங்கை இந்து மாமன்றத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினருக்கும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு நன்றி தெரிவித்தனர்.
இம்மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தினரால் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் உடனடி உதவிக்காக வழங்கியிருந்தார்கள். இதன்போது இம்மக்களுக்கு பாய், வெற்சீற், டோச், பால்மா, சீனி, குடை, பிள்ளைகளுக்கான பால் போத்தல் உட்பட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார ரீதியாகவும், பல்கலைக் கழக கல்வியை கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும் பல உதவிகளை தமிழ் உணவு மற்றும் ஆன்மீக உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.
மலையக மக்கள் தற்போது பாதிக்கப்பட்டதற்கு உடனடியாக வெளி இடங்களிலும் இருந்து முதல் தடவையாக தங்களுக்கு இவ்உதவி வழங்கி இருந்ததாகவும், இது தங்களுக்கு அவசியமாக தற்போது தேவைப்படும் உதவியெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment