0
(த.லோகதக்சன்)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கள் முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் இது மிகவும் வேதனையான விடயம். நான் இரண்டு நாட்களுக்கு முன் இவ்விடத்திற்கு விஜயம் செய்து இம்மக்கள் பற்றிய தகவல்களை பெற்று அவர்களுக்கு உதவிகள் வழங்கினேன்.

குறிப்பாக இப்பகுதியில் 54 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளது, அதே வேளையில் அதனைச் சூழ்ந்திருக்கின்ற மக்களும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய சூழல் இருப்பதன் காரணமாக அந்த மக்களும் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பொருத்தமட்டில் கொஸ்லாந்து கணேசா வித்தியாலயத்தில் 11 குடும்பங்களும், எஞ்சிய மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இருக்கின்றனர்.

அதே வேளை ஏனைய குடும்பங்கள் சார்பான தகவல்கள் எமக்கு கிடைக்கபெறவில்லை.

அங்கிருந்த குடும்பங்களை தவிர்த்து அவ்வழியால் வேலைக்குச் சென்றவர்களும் இதில் பாதிக்கப்ட்டிருக்கின்றார்கள.

எனினும் இந்த அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் இந்த மக்களுக்கான இடைத்தங்கள் முகாம் பராமரிப்பினை மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக பெரகல பகுதியில் இருந்து 17 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பாதிப்புக்குள்ளான பிரதேசத்திற்கு அருகாமையில் இருக்கின்ற கணேசா வித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாமில் அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை பண்டாரவளையில் இருந்து 22 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற மிகவும் குளிரான பிரதேசமாகிய பூணாகலையில் அடுத்த முகாமினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அங்கும் வசதிகள் செய்து கொடுப்பதில் தாமதிக்கின்றார்கள்.

எனவே இந்த அரசாங்கம் இரண்டு முகாமிலும் இருக்கின்ற மக்களை பண்டாரவளையில் ஒரு சிறந்த இடத்தினை தெரிவு செய்து அவர்களுக்கு தற்காலிக கொட்டிலை அமைத்து தனித்தனியாக அந்த குடும்பங்களை தங்கவைக்க வேண்டும்.

இங்கு பூரண உதவிகள் வந்து கிடைத்தாலும் கூட அதனைப் பராமரிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை. ஒரு அனர்த்தம் இடம்பெற்றால் எந்தளவிற்கு இந்த முகாம் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல அனர்த்தங்களில் ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு பல அனுபவம் இருக்கின்றது.

எனவே அந்தவகையில் இந்த மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக இருப்பதனை நான் கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.

இந்த விடயத்தினை நான் பாராளுமன்றத்திலும் பேச இருக்கின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்து என்னால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.









Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top