(த.லோகதக்சன்)
அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற கபடி பிறிமியர் லீக் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட எமது மட்டுநகர் மைந்தன் கணேசராஜா சினோதரன் அதன் மூலம் தனக்கு கிடைத்த சிறு தொகை ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையினை இலங்கை கபடி சம்மேளனத்திற்கு வழங்கி எமது மண்ணிற்கு மீண்டும் ஒரு பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
அண்மையில் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும், சப்பிரகமுவா மாகாண முதலமைச்சர் மஹிபாலஹேரத் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வழங்கினார்.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெருவினை சேர்ந்த கணேசராசா சினோதரன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வியினை பூர்த்தி செய்து 2010ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படையின் கபடி அணியில் இணைந்து கொண்டார்.
இலங்கை கடற்படையின் ஊடாக உள்நாட்டில் இடம் பெற்ற கபடி போட்டிகளில் மட்டும் அல்லாது சர்வதேச ரீதியில் பல ஆசிய நாடுகளுக்கும் விஜயம் செய்து தனது தனி திறமையினை வெளிப்படுத்தி பல வெற்றிப் பதக்கங்களையும், வெற்றிக் கேடயங்களையும், வெற்றிச் சான்றுதல்களையும் தன் வசப்படுத்தியது மட்டுமல்லாமல் நமது நாட்டுக்கும் பெருமைகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவ்வருடம் ஜூன் மாத காலப்பகுதியில் இந்தியாவில் இடம் பெற்ற கபடி பிறீமியர் லீக் போட்டிகளில் பெங்களுர் புள்ஸ் எனும் அணிக்கு பல சர்வதேச வீரர்களின் போட்டிகளின் மத்தியில் ஏலத்தின் மூலம் முதன் முறையாக தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு இலங்கை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டித் தொடர் முடிவடைந்து இலங்கை திரும்பிய சினோதரன் கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவரும், சப்பிரகமுவா மாகாண முதலமைச்சர் மஹிபாலஹேரத் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட சினோதரன் இலங்கை கபடி சம்மேளனத்தின் வளர்ச்சிக்காக ஒரு தொகை நிதியினை ஊக்குவிப்பாக வழங்கினார்.
இது தொடர்பாக சப்பிரகமுவா முதலமைச்சர் மஹிபாலஹேரத் பேசுகையில், இக்கால கட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்கள் பலதரப்பட்ட விளையாட்டுகளை வியாபாரமாக கையாளும் சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த குறைந்தளவு ஊதியத் தொகையில் ஒரு தொகை பணத்தினை இலங்கை கபடி சம்மேளனத்தின் வளர்ச்சிக்காக அன்பளிப்புச் செய்த கபடி வீரன் கணேசராஜா சினோதரனின் இந்த செயற்பாடு இலங்கை கபடி விளையாட்டு வரலாற்றுச் சரித்திரத்தில் இதுவே முதன் முறை என்று வாழ்த்தி பாராட்டுகளை பெருமிதமாக தெரிவித்தார்.
Post a Comment