0
(கிருஷ்மன்)

தீயசக்திகள் என்றும் விஷமிகள் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ள எங்களால் தான் தவிசாளர் இன்னும் பதவியில் உள்ளார் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றோம் என ஆலையடிவேம்பு பிரதேசசபை எதிர்க்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் நேற்று(04) கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பதவி ஆசை கொண்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தவிசாளரின் பதவியை பறிக்க வேண்டும் என கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் பல முறை வெளிநடப்பு செய்தபோதும் மக்களது நலனுக்காய் எதிர்க்கட்சியில் இருந்து ஆதரவு வழங்கியவர்கள் நாங்கள் என்பதை தவிசாளர் இன்றும் மறந்திருக்கமாட்டார் என நினைக்கின்றோம்.

உறுப்பினர்கள் வெளிநடப்பு என கடந்த 01ஆம் திகதி ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என 04ஆம் திகதி வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் க.ரகுபதி உறுப்பினர்களான தா.சந்திரகுமார், இராவடிவேல் ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேச சபை கூட்டங்களுக்கு சமூகம் கொடுப்பது எங்களது கடமை. அதற்கான கொடுப்பனவு பெறுவது உரிமை. அதற்காக கூட்டறிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என நினைப்பது நினைப்பவர்களது மடமை. இதனையும் தெரிந்து கொள்ள முடியாமல் பிரதேச சபை உறுப்பினர்களாக இருப்பது என்பது பெரும் கொடுமை.

கடந்த 29ஆம் திகதி நாங்கள் மூவரும் கூட்டத்திற்கு சமூகம் கொடுத்து கடந்த கூட்டறிக்கையை ஏற்றுக் கொள்ளாது வெளியேறியதன் பிற்பாடு தொலைபேசி வாயிலாகவும் எதிர்ப்பை சபை செயலாளருக்கு அறிவித்தோம். மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத இவர்கள் செயற்பாடுகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த நிருபரை அழைத்து விளக்கமளித்தோம்.

அச்சந்தர்ப்பத்தில் ஆளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வை.தியாகராஜாவின் நிலைப்பாடு பற்றி அறிய நிருபர் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டார். அவர் தானும் தனது எதிர்பை வெளியிடுவதாகவும் கூட்டறிக்கையை அங்கீகரிக்கவுமில்லை என உறுதிபட பல முறை எங்கள் முன்னிலையில் தெரிவித்தார். அவரது உரையாடல் தேவைப்பட்டால் டயலக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வெளியிடவும் தயாராகவுள்ளோம்.

அவ்வறிக்கை வெளியானதன் பிற்பாடு தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு நிருபர் ஒருவருடன் சென்ற ஆளுந்தரப்பினர் மறுப்பறிக்கை விடவேண்டும் என ஏதோ ஒரு வகையில் அவரை அணுகி மறுப்பறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு விஷமத்தனத்தில் செயற்படும் இவர்கள் எங்களை விசமிகள் என்கின்றனர். மக்களது நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை முன்வைக்கும் எங்களை புறக்கணிப்பதுடன் தங்களது இலாபம் கருதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். மேலும் அரசை விமர்சிக்கும் இவர்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டங்களை எங்களது ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் செயற்படுத்துவதில் முன்னிற்கின்றனர்.

சபை அமைக்கப்பட்ட காலம் முதல் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயற்படுவோம் என தெரிவித்தனர். பின்னர் சகல வேலைத்திட்டங்களையும் முறையற்ற விதத்தில் தங்களது கட்சி சார்ந்த உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் பகிர்ந்தளித்து எங்களது பிரதேசங்களை புறக்கணித்தனர்.

கடந்த கால இன்னல்களை கடந்து வந்த மக்களுக்கு பல தேவைப்பாடுகள் உள்ளபோதும் கூட பொருளாதார அமைச்சினால் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள 80இலட்சம் ரூபாவையும் தங்களது சுய நலத்திற்காக பங்கீடு செய்து செயற்படுத்தவுள்ளமையை மக்கள் அறிந்துள்ளனர் என்பதோடு இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவ்வறிக்கையில்; குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கடந்த கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களும் சமூகம் கொடுத்தனர் என்பது உண்மைக்கு புறம்பானது என்பதுடன் 7 உறுப்பினர்கள் மாத்திரம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் என தெரிவிக்க விரும்புகின்றோம். இவர்களின் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் விரைவில் தக்க பாடம் புகட்ட தயாராகி வருவதையும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம் என்றனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top