அமெரிக்க செனெட் சபையின் அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய குடியரசுக் கட்சி செனெட் சபையின் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
குடியரசுக் கட்சி நோர்த் கரோலினா, அயோவா உள்ளிட்ட தொகுதிகளில் பெற்ற வெற்றியின் மூலம், செனட் சபையில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான ஏழு ஆசனங்களை வென்றுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அர்கன்ஸாஸ், சவுத் டக்கோட்டா, வெஸ்ட் வேர்ஜினியா, மொன்ரானா, கொலராடோ முதலான மாநிலங்களிலும் தோல்வி கண்டிருக்கிறார்கள்.
ப்ளோரிடா, வின்கொன்சின் முதலான மாநிலங்களில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆளுனர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
காங்கிரஸ் என்றழைக்கப்படும் அமெரிக்க மக்களவை இரண்டு சபைகளைக் கொண்டுள்ளது.
செனட் சபையில் மாநிலத்திற்கு இரண்டு பேர் என்ற ரீதியில் 100 பிரதிநிதிகள் அங்கம் வகிக்கிறார்கள். பிந்திய நிலவரத்தின்படி குடியரசுக் கட்சி 52 ஆசனங்களையும், ஜனநாயக் கட்சி 45 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
பிரதிநிதிகள் சபையில் 435 ஆசனங்கள் உள்ளன. இதிலும் குடியரசுக் கட்ச 242 ஆசனங்களுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடைக்கால தேர்தலில், செனட் சபை அங்கத்தவர்கள் 36 பேர், மாநில ஆளுனர்கள், பிரதிநிதிகள் சபையின் 435 பேர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இரு சபைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக நிகழும் மாற்றம். இது ஜனாதிபதி பரக் ஒபாமா தலைமையிலான ஆட்சிகாலத்தின் எஞ்சிய இரு வருடங்களில் பலத்த சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
படங்கள் – ஏபிசி
Post a Comment