மட்டக்களப்பு மாநகர சபை தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பொது நூலகத்துடன் இணைந்து நடாத்தும் நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நகர மண்டபத்தில்; இரண்டாவது நாளாகவும் இன்று (01.11.2014) தொடர்கின்றது.
நேற்று (31.10.2014) மிக விமரிசையாக ஆரம்பமான இக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இன்றும் தொடர்வதுடன், நாளை (02.11.2014) நிறைவடையவுள்ளது.
இக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு பொது நூலகம் மட்டக்களப்பின் அரிதான நூல்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் பிரபல புத்தக சாலையான பூபாலசிங்கம் புத்தகசாலையும், மட்டக்களப்பின் பிரபல புத்தகசாலையான ராஜாஸ் புத்தகசாலையும் மற்றும் ஹறி கிருஸ்ணா இயக்கமும் கண்காட்சியில் முன்னிலையில் ஈடுபடுகின்றனர்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் தற்போது நடைபெற்று வருகின்றது. பொது மக்களும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வருகைதந்து கண்காட்சியைப் பார்வையிடுவதுடன் நூல்களைப் பெருமளவில் கொள்வனவு செய்தும் வருகின்றனர்.
மட்டக்களப்பின் கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர் இக் கண்காட்சிக்கு வருகை தந்து பார்வையிடுவது மட்டுமல்லாமல் அதிகளவிலான புத்தகங்களை கொள்வனவு செய்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment